பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள “வார்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வார் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஹிருத்திக் ரோஷன், வாணி கபூர் நடித்துள்ள “வார்” திரைப்படம், இரு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை மையமாக வைத்து 172 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படமானது, நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு நாளையே வெளியாகவுள்ளதாகவும், இப்படத்தை இணையதளங்களில் வெளியிட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, “வார்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.