கூகுளுக்கு போட்டியாக வரும் ஹார்மனி இயங்குதளம்

இந்த ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் ஒரே ஓபன் சோர்ஸ் இயங்குதளமான ஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக ‘ஹார்மனி’ என்ற புதிய இயங்குதளத்தைக், சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான  களம் இறக்கி இருந்தது. அதே வாவே நிறுவனம் தற்போது கூகுள் பிளே ஸ்டோர் சேவைக்குப் பதிலாகப் புதிய சேவையையும் களம் இறக்கி உள்ளது.

 உலகெங்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக கூகுளின் ஆண்ட்ராய்டு உள்ளது. ஆப்பிள் போன்களைத் தவிர்த்துப் பிற அனைத்து ஸ்மார்ட் போன்களும் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்தான் இயங்குகின்றன. ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான சீனாவின் வாவே நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும் ஆண்ட்ராய்டு தளத்தைத்தான் பயன்படுத்தி வந்தன.
 
இந்நிலையில் சில மாதங்கள் முன்பு அமெரிக்க-சீன வணிகப்போர் பலமடைந்த போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபடக் கூடாது’ – என்று ஒரு திடீர்த் தடையை விதித்தார். இதனால் அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தயாரிக்கும் ஆண்ட்ராய்டை சீனாவின் வாவே நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
 
பின்னர் டிரம்பே இந்தத் தடையை விலக்கினார் என்றாலும், வாவே நிறுவனத்தின் முன்பு ஒரு பெரிய கேள்வியை இது எழுப்பியது. இதனால் வெறும் இரண்டு மாதக்கால உழைப்பில் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக ஹார்மனி என்ற புதிய இயங்குதளத்தை உருவாக்கியது ‘வாவே’.
 
ஆண்ட்ராய்டைப் போலவே ஓபன் சோர்ஸ் இயங்குதளமாக உருவாக்கப்பட்ட ஹார்மனி இயங்குதளத்தை யார் வேண்டுமானாலும் தங்கள் கைபேசியில் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். கைபேசிகள் தவிர ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வாட்சுகள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்தலாம்.
 
இதன் அடுத்த கட்டமாக, ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் வழங்குவதைப் போல, ஹார்மனி இயங்கு தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கெனத் தனி சேவையை உருவாக்கத் திட்டமிட்டது வாவே. இதற்காகப் பல்வேறு கைபேசி செயலி தயாரிப்பாளர்களுக்கும் வாவே அழைப்பும் விடுத்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது, ஹார்மனி இயங்குதளத்திற்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட செயலிகளைக் கொண்டு, கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக ’வாவே மொபைல் சர்வீஸஸ்’ – என்ற சேவையை வாவே நிறுவனம் தொடங்கி உள்ளது. தற்போது சீனாவில் வாவே மொபைல்
சர்வீஸஸ் சேவையின் பீட்டா வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவை, மெல்ல உலகெங்கும் உள்ள 170 நாடுகளுக்கு விரிவாக்கப்படத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கும், கூகுள் பிளே ஸ்டோர் சேவைக்கும் முதன் முறையாக ஒரு போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்தப் போட்டி எதை நோக்கி நகரும் என்பதை அடுத்த ஆண்டுதான் நாம் அறிய முடியும்.

Exit mobile version