சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. எத்தனையோ பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் மக்களுக்கு தனி சிறப்பு வாய்ந்த பண்டிகையாக இந்த தமிழ் புத்தாண்டானது விளங்குகிறது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர் பாரதியார். “தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழின் சிறப்பை உணர்த்தியவர் பாரதிதாசன். இப்படி தமிழ் மொழியின் பெருமை குறித்து புகழ் பாடியவர்கள் பலர்….
தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள மொழி என்று சொல்லப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, எளிமை, என்பது பொருளாகும். அப்படிப்பட்ட தமிழை பேசும் பாரம்பரியமிக்க தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிப்பது இந்த தமிழ் புத்தாண்டு தான். கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம். இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபகிருது ஆண்டை வழியனுப்பி சோபகிருது புத்தாண்டை வரவேற்க தமிழ் மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.
சித்திரை தமிழ் புத்தாண்டுக்கு தயாராகும் விதமாக வீடு வாசலை சுத்தம் செய்து, அலங்கரித்து வெற்றிலை-பாக்கு, மா, பலா, வாழை ஆகிய முக்கனி,நகைகள், பூக்கள் என மங்கலப்பொருட்கள் வைத்து வீட்டில் வழிபாட்டில் ஈடுபடுவர். புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபட்டு, மாலை வேளையில் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு புத்தாண்டிலும் வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி சிறப்பு உணவாக சமைப்பது மரபாகும்.
இந்த சிறப்பு மிக்க சித்திரை ஒன்று தான் இலங்கை, மியான்மர், கம்போடியா நாடுகளுக்கும் புத்தாண்டு என்பது கூடுதல் சிறப்பு. சோபகிருது என்றால் தமிழில் மங்களம் என்று பொருள். பிறந்திருக்கும் சோபகிருது புத்தாண்டு அனைவருக்கும் மங்களமும், சிறப்பும் வாய்ந்த அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.
– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர்