ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கு தண்டனையில் இறக்கிறார் என்ற பகீர் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டில்..? ஏன்..? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரான் தொடர்பாக மனித உரிமைகள் குழு ஒன்று வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அது, ஈரானில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் தூக்கில் இடப்படுகிறார் என்பதுதான்.
ஈரானில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறது அந்த தகவல். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 194 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மனித உரிமைகள் குழு.
தூக்கிலிடப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தூக்கிலிடப்பட்ட 42 பேர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் என்றே கூறுகின்றனர். மற்றொரு புறம், ஈரான் நிர்வாகம் திட்டமிட்டே பலூச் சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இக்கொடூர செயலில் ஈடுபடுகிறது என்றும், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி இரட்டை குடியுரிமை கொண்ட ஈரானியர்களும் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஈரானில் 2023ல் இதுவரை 194 பேருக்கும் அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு மரண தண்டனைகள் மட்டுமே அதிகாரிகளால் முறையாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மரணதண்டனைகள் “அறிவிக்கப்படாதவை” மற்றும் “ரகசியமாக” மேற்கொள்ளப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
ஈரான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ல் மட்டும் ஈரானில் 582 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், இது 2015க்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தண்டனைகளின் நோக்கம் சமூக பயத்தை ஏற்படுத்துவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல’ என்றும் மனித உரிமைகள் அமைப்பு குரல் கொடுத்துள்ளது.
– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர்