விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 5வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்களின் முதற்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சத்திரபட்டி பகுதியில் 50 சதவீதம் கூலி உயர்வு மற்றும் பண்டிகை கால விடுப்பு சம்பளம் உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக 2000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை இணை இயக்குநர் மலர்கொடி மற்றும் வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமையில் பெரிய மற்றும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, தொழிற் சங்கங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடைபெற்ற முத்தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாதநிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.