விடியா ஆட்சியில் ஊழல் ஊறி, புரையோடி போனதன் விளைவாக அரசு மருத்துவமனைகளில் மரண ஓலம் நின்றபாடில்லை. அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி மீது நடவடிக்கை எடுத்தால், எங்கே ஆட்சியை குறை கூறி விடுவார்களோ எனும் எண்ணத்தில், தவறிழைத்தவர்களின் பாதுகாப்பு கேடயமாய் செயல்பட்டு வருகிறது விடியா அரசு.
என்ன நடந்தது?
இவ்வாறு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயலும் தொடை நடுங்கி விடியா அரசால், எந்த தவறும் செய்யாத ஒன்றரை வயது குழந்தையின் உயிர் இன்று அநியாயமாக பறிபோயுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின், ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு, இதயத்தில் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக, கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
அன்றிரவே குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குழந்தையின் வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு, விரல்கள் வீங்கத் தொடங்கின. மருத்துவர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும், கையை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
மருத்துவத்துறையின் அவலம்..!
குழந்தையின் நிலைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, விடியா அரசு பெயருக்கென மூவர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது. இறுதியில் தவறான சிகிச்சை காரணமல்ல எனவும், வேண்டுமானால் குழந்தையின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொள்ளட்டும் எனவும் கிண்டல் செய்யும் பாணியில் பதிலளித்தார் விடியா அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்நிலையிலேயே உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அலட்சிய அரசு..!
இதே போன்று தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வியாசர்பாடியில் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதேயான கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வலது கால் அகற்றப்பட்டது. பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கால்பந்தில் சாதிக்க வேண்டும் என எண்ணிய வீராங்கனையின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கின. இதனால் பயந்து போன விடியா அரசு, பெயருக்கு 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து விட்டு, நிவாரணம் வழங்கி நீலிக்கண்ணீர் வடித்தது.
இந்நிலையில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று விளம்பரம் தேடுவதில் காட்டும் முனைப்பை, சிறிதளவேனும் அமைச்சர் மா.சு துறையில் காட்டியிருந்தால் பெருமளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அலட்சியத்தால் உயிரை காவு வாங்கும் விடியா அரசின் ரத்த தாகம் எப்போது தணியும் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.