முடி திருத்தும் கடையை கார் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர்கள்

சென்னை பூந்தமல்லி அருகே முடி திருத்தும் கடையை கார் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லியை அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த நிஷாந்தினி மற்றும் அருமன் அலி ஆகியோர் கரையான்சாவடி, பிராடிஸ் சாலையில் புதிதாக முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றை திறந்துள்ளனர். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு காரை வேகமாக ஓட்டி சென்று கடையின் கண்ணாடி கதவின் மீது மோதினர். இதில் கடையின் கண்ணாடி உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் கடை ஊழியர்களை தாக்கிவிட்டு பொருட்களை சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version