சுங்க வரி ஏய்ப்பு வழக்கு – தலைமறைவு குற்றவாளியாக நிரவ் மோடி அறிவிப்பு

52 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு புகாரில், வைர வியாபாரி நிரவ் மோடியை தலைமறைவு குற்றவாளியாக குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை இந்திய அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறனர். சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய முயற்சி எடுத்து வரும் நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு 52 கோடி ரூபாய் அளவுக்கு சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சுங்க வரி துணை ஆணையர் ஆர்.கே.திவாரி குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், நிரவ் மோடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்குமாறு நீதிமன்றத்துக்கு சுங்க இலாகா கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, நிரவ் மோடியை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவின்கீழ், ‘தலைமறைவு குற்றவாளி’என்று அறிவிக்கப்பட்டது. வரும் 15-ந் தேதி, நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version