குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!

2022 ஆம் ஆண்டு ஜூலை 11ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகளை வெளியிடுவதற்கு இந்த அரசிற்கு எட்டு மாதங்கள் ஆகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் குரூப் 4 தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தனியார் அகடாமியைச் சேர்ந்தவர்களில் 2000 பேர் இந்த குரூப் 4 தேர்வுகளில் தேர்வாகியிருப்பது மற்ற தேர்வர்களிடம் ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியினை மட்டுமே உண்டாக்கியுள்ளது.

குரூப் 4 தேர்வுகள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் ஆளும் அரசிடம் கொண்டு சென்றால் அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்து தன்னை அறிவாளிபோல காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ மெத்தனமாக பதிலளித்து வருகிறார். அவர், 24 லட்சம் பேருக்கு குரூப் 4 தேர்வை நடத்துவதற்கு தேவைப்படும் நூறு கோடி பக்கங்கள் கொண்ட கேள்வித்தாள்களை அச்சிட அரசுக்கு 48 கோடி ருபாய் செலவு ஆகிறது என்றும் இது அரசிற்கு வீண் செலவு என்றும் கூறுகிறார். அவர் சொன்னதை ஒருபுறம் வைத்துக்கொள்வோம். ஒரு தேர்வரிடம் நூறு ரூபாய் வீதம் தேர்வுக்கட்டணமாக வசூலிக்கிறார்கள். அப்படியென்றால் 24 இலட்சம் பேரிடம் இருந்து 24 கோடி ரூபாயினை வருமானமாக இந்த அரசு பெறுகிறது, இதனை ஏன் கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டார் நிதியமைச்சர் என்று பாதிக்கப்பட்ட தேர்வரகள் குறைகூறி வருகிறார்கள்.

மேலும் தேர்வின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க விடைத்தாள்களைப் பதவிறக்கம் செய்யும் முறையைக் கொண்டுவரலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஏற்கனவே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகளின் முதன்மை தேர்வுகளின் விடைத்தாள்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்ற முறையை டிஎன்பிஎஸ்சி அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. 80 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களையே பதிவிறக்கம் செய்ய முடிந்தால், குரூப் 4-ஐப் பொறுத்தமட்டில் அது வெறும் இரண்டு பக்கம் அளவுள்ள ஓ.எம்.ஆர் தாள்தான். இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பினை அரசால் ஏற்பாடு செய்ய முடியுமே என்றும் தேர்வர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். தேர்வு முடிந்தவுடன் ஓ.எம்.ஆர் தாளின் கார்பன் நகலை மாணவர்களுக்கு கொடுக்கும் முறையை செயல்படுத்தலாம். பல தேர்வு ஆணையங்கள் இந்த முறையைப் பின்பற்றி வருகிறது என்ற கோரிக்கையையும் தேர்வர்கள் அளித்துவந்துள்ளனர். இதுவெல்லாம் நிதியமைச்சர் காதிற்கு எட்டுமா அல்லது எட்டாக் கனியாக இருந்துவிடுமா? என்பது கேள்வியே.

 

Exit mobile version