“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

காதல் எங்கு இருக்கிறதோ, வாழ்வும் அங்கேயே இருக்கிறது எனும் புகழ்பெற்ற காந்தியின் வரிகளுக்கு ஏற்ப, இதயமே செயலிழந்தபோதும் இம்மியளவும் ஒருவரை ஒருவர் பிரியாமல், நம்பிக்கை கீற்றை பற்றிக் கொண்டு இல்லற வாழ்வில் புகுந்த காதல் தம்பதி குறித்தே இந்த செய்தித் தொகுப்பில் காணவிருக்கிறோம்…

யார் இந்த தம்பதிகள்..?

காதல் என்பது இரண்டு உடல்களில் வாழும் ஒரே ஆன்மா எனும் அரிஸ்டாடிலின் வரிகளுக்கு ஏற்ப, காதலனின் இதயமே கிட்டத்தட்ட முழுவதும் செயலிழந்தபோதும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்லாமல், தானமாக கிடைத்த இதயத்தால் இல்லற வாழ்வு கை கூடியிருக்கிறது இந்த தம்பதிக்கு.

கடலூர் மாவட்டம், பல்லவராயநத்தம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினிதா. இருவரும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நித்யானந்தம் மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் நித்தியானந்தத்துக்கு 75 சதவீதம் இதயம் செயல் இழந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நித்தியானந்தத்தை திருமணம் செய்ய, வினிதாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்புக்கு அடிபணியாமல், திருமண முடிவில் வினிதா உறுதியாக இருந்துள்ளார்.

மரணப்படுக்கையிலும் கைவிடதா காதலி..!

ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை கைவிட்டு செல்லும்படி நித்தியானந்தம் கேட்டுக் கொண்டும், அதற்கு வினிதா மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், கண்டிப்பாக நீ என்னை விட்டுச் சென்றிருக்க மாட்டாய் எனக்கூறி, கடைசி வரையிலும் உன்னுடனேயே இருப்பேன் என காதலனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் வினிதா.

மேலும் காதலனை விட்டுச் செல்வதற்கு பதிலாக, அவருக்கு மாற்று இதயம் கிடைப்பதற்கான வழிவகைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் வினிதா. இறுதியில் 8 மாத காலம் காத்திருந்த காதல் ஜோடியின் வாழ்வில், இதயம் கிடைத்து விட்டதாக மருத்துவமனை அழைப்பின் வழியே வசந்தம் வந்து சேர்ந்துள்ளது.

இதனையடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற, கடந்த ஆண்டு நித்தியானந்தம் – வினிதா ஜோடிக்கு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இவர்களது காதலின் அடையாளமாக கடந்த பிப்ரவரியில் ஓர் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர் இந்த காதல் பறவைகள்.

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வோர் இல்லற வாழ்வில், முன்பு போல் நலமுடன் வாழமுடியாது என பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அதனை தகர்த்தெறியும் வகையில் தங்களது வாழ்க்கை அமைந்துள்ளதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர் நித்தியானந்தம் – வினிதா தம்பதி.

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! –

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! –

எனும் பாரதியின் வரிகளைப் போல காதலைச் சரணடைந்து கரையேறிய இத்தம்பதியை எடுத்துக்காட்டாய் கொண்டு, இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்த தவறான புரிதல்களை அனைவரும் மாற்றிக் கொள்வதோடு, உடல் உறுப்பு தானத்துக்கும் முன்வரும் பட்சத்தில் பலரது வாழ்விலும் இனி வசந்தம் வீசும்.

Exit mobile version