கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலம், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டது. மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன், மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி, தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து, 2015 செப்டம்பர் மற்றும் 2019 ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில், 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலம், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.