ராஜீவ்காந்தி கொலையில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க, தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர் பார்த்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பத்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி ராம் கிருஷ்ண கவாய், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 938 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம், சட்டக்கல்லூரிகள் சிறப்பாக செயல்படுவதற்காக, ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் நிதி வழங்க, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதேபோல் சென்னை பார் கவுன்சில் அரங்கில் மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவசுப்பரமணியம் நினைவு தின கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய், தமிழகத்தில் தந்தை பெரியார் காலத்தில் இருந்தே சமூக சீர்திருத்தங்கள் இருந்து வருவதாக கூறினார். அம்பேத்கர் போன்றோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்கும் வகையில், சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தால், அதனை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பரமணியன், வழக்கறிஞர் தொழிலில் சிறந்து விளங்க வேண்டுமானால் தாய்மொழிப் பற்று அளவுக்கு ஆங்கிலப் புலமையும் அவசியம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், 409 சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பரமணியன், புதிய வழக்கறிஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுப்பசி இருக்கவேண்டும் எனவும் கூறி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Discussion about this post