உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு அதிரடி

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை இயற்றியதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டே 313 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 92 பல் மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த, உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை, கடந்த 18ம் தேதி நடைபெற்ற விழாவில் தாம் அறிவித்திருந்ததை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்களின், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கல்விக் கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு
சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அ.தி.மு.க. அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் கனவினை நனவாக்கி, சம நீதியை நிலைநாட்டி, வரலாற்றுச் சாதனை படைத்த அதிமுக அரசு, ஏற்கனவே தாம் அறிவித்தவாறு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனைவரும் அறிவர் என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என்று தெரிந்த பின்பும், தி.மு.க. உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version