தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு, வினா வங்கி புத்தகத்தையும் அமைச்சர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.
முன்னதாக, 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பிடம், 26 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உணவு அருந்தும் அறை மற்றும் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 72 ஜோடிகளுக்கு, 72 சீர் வரிசைகளுடன் திருமணம் நடத்துவதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறினார்.