கரூரில் 269 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி காந்தி கிராமத்தில், 17.45 ஏக்கரில், 269 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில், பல்வேறு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையில் வகுப்புகள் கொண்ட ஆறு மாடிகள் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள தாளியூரில், 30 படுக்கை வசதி, எக்ஸ்ரே, ஆப்ரேஷன் தியேட்டர் கொண்ட ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை ரிஷப்சன் அறை, வெளிநோயாளிகள் அறை, 10 படுக்கை கொண்ட உள்நோயாளிகள் அறை, 5 படுக்கை வசதி கொண்ட பெண்கள் வார்டு உள்ளிட்ட தனியார் மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் அடங்கியதாக உள்ளது. சுகாதார நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. இதில், தாய்-சேய் நல அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post