முன்னெல்லாம் நாம் தெரியாத இடத்திற்கு செல்லும் போது வழியில் இருப்பவர்களிடமும், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் தான் வழியை கேட்டு செல்வோம்.அவர்கள் சொல்லும் வழியும் சரியாக தான் இருக்கும்.ஆனால் தொழில்நுட்பம் வளர வளர நாம் மற்றவர்களிடம் பேசுவதே குறைந்துவிட்டது.மொபைல் போன் என்ற பெயரில் உலகத்தையே நமது கையில் அடக்கிவிட்டனர். நாம் செல்லும் இடத்தின் பாதையை போனிலே தெரிந்து கொள்வதற்கு கூகுள் நிறுவனம் கூகுள் மேப் என்ற சேவையையும் அறிமுகப்படுத்தியது.
அதன் அறிமுகத்திற்கு பிறகு அனைவரும் கூகுள் மேப் சேவையையே அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.ஆனால் சில சமயத்தில் முட்டு சந்தில் போய் நிறுத்தி விட்டு சுவற்றை தாண்டி செல்லுங்கள் என்று சொன்ன கதைகளும் உண்டு.அதே போல் கோவாவில் ஒருவருக்கு நடந்துள்ளது.கோவாவின் புகழ்பெற்ற கடற்கரை பாகவிற்கு(baga)செல்ல வழி கேட்ட போது கூகுள் மேப்பானது தவறான பாதையை காட்டியுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த ஒருவர் கூகுள் மேப்பை மரணமாக பேனர் வைத்து கலாய்த்துள்ளார்.அந்த பேனரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ’கூகுள் மேப் உங்களை முட்டாளாக்கியுள்ளது,இந்த வழியாக சென்றால் பாக கடற்கரைக்கு செல்ல முடியாது எனவும் ,நீங்கள் வந்த வழியே திரும்ப சென்று இடதுபுறமாக திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் பாக கடற்கரை வந்துவிடும்’என்று கூறியுள்ளார்.
முதல்முறை கோவாவிற்கு செல்லும் அனைவரும் பாக கடற்கரைக்கு செல்ல கூகுள் மேப்பில் வழி தேடினால் தவறான வழியை தான் காட்டுகிறதாம்.எனவே மற்றவர்களுக்கு சரியான வழியை கூறவே இப்படி ஒரு பேனரை அடித்து ஒருவர் வைத்துள்ளார்.இந்த பேனரை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.தற்போது இது வலைதளவாசிகளிடம் வைரலாக பரவி வருகிறது.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியால் நாம் செல்லும் வழியை போனில் தேடினாலும்,அத்தனை வருடமாக அந்த மண்ணில் வாழும் மக்களை விட கூகுள் மேப் சரியாக சொல்லிவிடுமா என்ன.