அடிக்கடி மாறும் டூடுள்!
கூகுள் நிறுவனமானது முக்கியமான நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையிலும், சர்வதேச நிகழ்வுகளையும், குறிப்பிடத்தக்கவர்களின் பிறந்தநாள்களையும் நினைவுக்கூறும் விதமாக தனது டூடுளை மாற்றும். நம்மில் பலர் கூகுளின் டூடுளைப் பார்த்து தான் சில முக்கியமான நிகழ்வுகளையே தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இன்று கேட்-ஐ கண்ணாடியாக தனது டூடுளை மாற்றியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் சற்று வரலாற்று பார்வையில் பார்க்க வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா ஷினாசி, இவருடைய 116-வது பிறந்தநாளான இன்று அவரை போற்றும் விதமாக சிறப்பு டூடுளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. யார் இந்த அல்டினா ஷினா? கூகுளின் டூடுளுக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை காண்போம்.
யார் இந்த அல்டினா..!
அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா 1907 ஆம் ஆண்டு நியூயார்க்கின் மன்ஹாட்டனில் பிறந்தார். அல்டினா பல்வேறு திறமைகளை கொண்டவர். அவர் சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், மற்றும் வடிவமைப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டவர். இதனை தவிர ஏராளமான ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். இவர் ஓவியங்களை தாண்டியும் பல கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். அதில் ஒன்று தான் கேட்-ஐ கண்ணாடி. பாரிஸில் ஓவியக் கலை பயின்ற அல்டினா, அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு நியூயார்க்கில் உள்ள பல்வேறு ஸ்டோர்களில் ஜன்னல் அலங்காரம் செய்பவராக பணியாற்றினார். அப்போது பெண்களின் கண்ணாடியானது வட்ட வடிவில் மட்டுமே ஃபிரேம்கள் இருப்பதை பார்த்த அல்டினா இதற்கு மாற்றாக கேட்-ஐ கண்ணாடியை (cat eye) உருவாக்கினார். இது ஹார்லிகுயின் (Harlequin) ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கேட்-ஐ கண்ணாடிகளை பல்வேறு தொழில் நிறுவனங்கள் நிராகரித்தன. மனம் தளராத அல்டினாவிற்கு அங்கு உள்ள சிறிய கடை வியாபாரி ஒருவர் அவரது கண்ணாடிகளை வாங்கி விநியோகம் செய்தார்.
டூடுளாக மாறிய கேட்-ஐ கண்ணாடி…!
அந்த கண்ணாடியானது சில நாட்களிலேயே நியூயார்க் நகரம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த ஃபிரேம்கள் 1930களின் பிற்பகுதியிலும் 1940களிலும் அமெரிக்காவின் ட்ரெண்டாக மாறியது. அக்காலத்தில் தொடங்கி இன்று வரை இந்த ட்ரெண்டின் மவுசு குறையாமல் தான் உள்ளது என்று சொல்ல வேண்டும். அல்டினா தனது கண்டுபிடிப்பிற்காக 1939ஆம் ஆண்டு லார்ட் மற்றும் டெய்லர் அமெரிக்கன் டிசைன் விருது பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து ‘தி ரோட் ஐ ஹேவ் டிராவல்ட்’ என்ற புத்தகத்தையும் அல்டினா எழுதியுள்ளார். மேலும் அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனது ஆசியரான ஜார்ஜ் க்ரோஸைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆவணப்படமானது வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தை பிடித்தது. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அல்டினா ஷினா 1999-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது பெருமைகளை நினைவுக்கூறும் விதமாக 2014-ஆம் ஆண்டு ஆவணப்படம் ஒன்று வெளியானது. இவற்றைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு பெருமை சேர்த்தது.