கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க – சீனா இடையேயான வர்த்தகப் போர், பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி எதிரொலி போன்ற காரணங்களால் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு 3 ஆயிரத்து 640 ரூபாய் உயர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 765 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் சவரன் 31 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 55 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிலோ, 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.