பக்ரீத் திருநாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வாழ்த்து அறிக்கை :
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில் எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாங்களை எண்ணிப்பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
இத்தியாகத் திருநாள் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுவபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும் நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைரது வாழ்வில் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து செய்தியினைக் கூறியுள்ளார்.