பட்டினம்பாக்கம் எஸ்டேட் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் வாழும் பகுதியை குப்பை மேடாக மாற்றி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
மக்கள் வசிக்கும் பகுதி எனக் கூட பாராமல், நள்ளிரவில் கொள்ளையர்களைப் போல வந்து குப்பைகளைக் கொட்டிச் செல்லப்படுவதால் இப்பகுதி முழுவதும் குப்பை மேடு போல காட்சியளிக்கிறது…
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே செல்லக்கூடிய பிரதான சாலைகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. விடியா ஆட்சி அமைந்த நாளில் இருந்தே இத்தொல்லை தொடங்கியதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாந்தோம் பிரதான சாலையிலிருந்து பட்டினம்பாக்கம் செல்லக்கூடிய இச்சாலை வழியாக தான் சீனிவாசபுரம், முல்லிமா நகர், நம்பிக்கை நகர், பவாணி குப்பம், ராஜிவ் நகர், காந்தி நகர், டுமில் குப்பம், நொச்சுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்,
மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் கழிவுகளும் தேவையற்ற உதிரி பாகங்களும் குப்பைகளும் லாரிகளில் கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடப்பதில் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் மலைபோல குவிக்கப்படுவதால் இரவு நேரங்களில் இந்த இடம் முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதாம். மின்விளக்குகள் கூட இல்லாததால் இரவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு கூட பெண்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின் விளக்குகள் இல்லாதது சமூகவிரோதிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மழை காலங்களில் இப்பகுதி முழுவதும் தேங்கி நிற்கின்ற மழை நீரில் குப்பைகள் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு பரவி வருவதால் இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், முதியவர்கள் பலர் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தங்களின் பிரச்சனை குறித்து திமுக எம்எல்ஏ வேலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு எந்த பயனும் இல்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். விடியா ஆட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்காமல், மக்கள் வசிக்கும் பகுதிகளை இப்படி குப்பை மேடாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.