ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியானது லண்டன் மாநகரத்திலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்டியது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்தின் அதிரடி சதத்தினை விளாசினார்கள். அதற்கு பிறகு களத்தில் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ரோகித் 15, சுப்மன் 13, புஜாரா 14, கோலி 14, ஸ்ரீகர் பரத் 5 என்று அடிக்க ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். தற்போது மூன்றாம் நாளான இன்று ரஹானேவும், தாக்கூரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தற்போது வரையிலான ஆட்டத்தில் இந்திய அணியானது 260 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

அதிகபட்சமாக ரஹானே 89 ரன்களும், ஷர்துல் 36 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இருக்கும்வரை முடிந்த அளவுக்கு இந்திய அணியானது பாலோ ஆனை தடுக்கும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறாதது மிகப்பெரிய பின்னடைவாக அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  அதாவது, “புற்கள் அதிகம் உள்ள ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது, ஜடேஜாவினை நாதன் லியான் அவுட் ஆக்கும் போது பந்து ஆஃப் சைடு திரும்பி நன்றாக பவுன்ஸ் ஆனது. ஆனால் நமது அணி அஸ்வினை எடுக்காதது மிகவும் பின்னடைவானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version