சென்னை நங்கநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

சென்னை நங்கநல்லூரில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த பாக்ரி கொள்ளையர்கள் 7 பேர், 5 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டனர். ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தவர்களை மத்திய பிரதேச காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை தமிழக காவல்துறையினர் 24 மணி நேரத்தில் எப்படி மீட்டு கொண்டு வந்தனர் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் கோமளவல்லி என்பவர் வீட்டில் 120 சவரன் தங்கம், வைரநகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று தாம்பரம் சி.டி.ஓ. காலனி பகுதியிலும் அடுத்த சில மணி நேரங்களில் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை செய்ததில் இரண்டு கொள்ளை சம்பவங்களையும் நிகழ்த்தியவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு கொள்ளை கும்பல், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பாக்ரி கொள்ளையர்கள் என்பவர்கள், கொள்ளை அடிக்கும் இடத்தில் ஆட்கள் இருந்தாலும் கொடூரமாக தாக்கி கொலை செய்து திருட்டில் ஈடுபடுவார்கள். ஆனால், ஆள் இல்லாததை வீட்டை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து அரைமணிநேரத்தில் கொள்ளை அடித்து தப்பிக்க கூடியவர்கள்.

இந்நிலையில், ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை பிடிக்க மத்திய பிரதேசம் காவல் துறையினரை உஷார் படுத்தப்பட்டனர். இதையடுத்து, தூரிதமாக செயல்பட்ட காவல்துறை கொள்ளையர்கள் 7 பேரையும் கைது செய்தது. விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாக்ரி கொள்ளையர்கள், சென்னையில் முகாமிட்டு கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தியது தெரியவந்தது. தமிழக காவல்துறையினர் 5 மணி நேரத்தில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு 24 மணி நேரத்தில் அவர்களை கைது செய்து இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

சென்னை தனிப்படை காவல்துறையினர் பிடிபட்ட 7 கொள்ளையர்களையும், சென்னை அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதே கொள்ளைக் கும்பல் கடந்த 18 ஆம் தேதி ஆதம்பாக்கத்தில் வீடு புகுந்து 10 சவரன் நகையை கொள்ளை அடித்ததையும் தாம்பரம் சி டி ஓ காலனி ராமன் என்பவரது வீட்டில் 351 சவரன் நகையும் 11 லட்ச ரூபாயை கொள்ளை அடித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளது.

வடமாநிலத்தில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 120 சவரன் நகை மற்றும் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதில், பிடிபட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் தமிழகத்தில் தலைமறைவாக உள்ளார்களா அவர்கள் யார் யார் என்பது குறித்து அறிய 7 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பிரபாகர், உதவி ஆணையர் சங்கரநாராயணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Exit mobile version