தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விநாயகர் சதுர்த்தி வழா களையிழந்தது
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாட்டில் களையிழந்து காணப்பட்டது. சென்னையில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியிலேயே வழிபாடு செய்துவிட்டு சென்றனர். சென்னை லஸ் கார்னரில் உள்ள நவசக்தி விநாயகர் கோயில் மூடப்பட்டிருந்ததால், கோயிலுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு 30 கிலோவும், உச்சி பிள்ளையாருக்கு 30 கிலோவும் என 60 கிலோ எடையிலான கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கோவையில் புகழ்பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திகாலை முதலே பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். பக்தர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வெளியே சாலையில் நின்றபடி தரிசனம் செய்தனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி தினத்தில், கோயில்களை தமிழ்நாடு அரசு அடைத்திருப்பது தங்களுக்கு வேதனை அளிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு 16 வகை பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின்போது, கோயிலின் வெளிப்புறத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Discussion about this post