நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையில் லால்பாக் சா ராஜா என்னுமிடத்தில் பல வகைப் பொருட்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மிகப்பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பின்புறத்தில் விண்வெளி வீரர், சந்திரயான்-2 விண்கலம் ஆகிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.
இதேபோல், மும்பை ஆல்ட்டமவுன்ட் ரோடு என்னுமிடத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தித் திரைப்பட நடிகர் சுனில் செட்டியும் விநாயகரை வழிபட்டார். மும்பை மாதுங்காவில் தங்க நகைகளாலும் விலையுயர்ந்த ஆபரணக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள தங்க விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை வழிபடும் பக்தர்கள் சிலையின் அலங்காரத்தைக் கண்டு வியப்படைந்தனர்.
நாக்பூர் தாந்தியா தோபே நகரில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.
இதேபோல், மகாராஷ்டிர மாநில அமைச்சர் வினோத் தாவ்டேயின் பங்களாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பெங்களூரில் உள்ள தொட்ட கணேஷ் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லட்சுமி கணபதி கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.