இரண்டு வாரங்களில் கஜா நிவாரண உதவி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலுக்கு 15 ஆயிரம் கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். போதிய நிதி இருந்தும், கஜா புயல் நிவாரண உதவியை அறிவிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக விசாரணையில் தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கஜா புயல் நிவாரண நிதி குறித்து இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக அரசிடம் உள்ள பேரிடர் நிவாரண நிதியான ரூ. 1,277 கோடியை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து விசாரணையை வரும் ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு உத்தரவிட்டனர்.
Discussion about this post