கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இதுவரை ஆயிரத்து 215 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் புயல் பாதித்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மீட்புப் பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியிருந்தது. இது குறித்த விரிவான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில் கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடாக 14 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தவர்களுக்கு 401 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, குடிசைகளை இழந்தவர்களுக்கு 338 கோடியே 46 லட்சமும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 338 கோடியே 57 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விவசாய பயிர்களுக்கு 709 கோடியே 34 லட்சமும், தோட்டக்கலை பயிர்களுக்காக 64 கோடியே 79 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த ஒவ்வொரு தென்னைக்கும் ஆயிரத்து100 ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தத் தகவல்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.