கஜா புயல் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள மத்திய குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கக்கோரி டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, கஜா புயல் சேதத்தை விளக்கிக் கூறிய முதலமைச்சர், பாதிப்பை மதிப்பிட மத்தியக்குழுவை உடனடியாக அனுப்பவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்தியக் குழு நேற்றிரவு சென்னை வந்தது. மத்திய நிதித்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட இந்தக்குழு, இன்று காலை 9 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள், புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர், குழுக்களாக பிரிந்து புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகின்றனர். முதலில் புதுக்கோட்டையில் தங்களது ஆய்வை துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் தங்களது ஆய்வை மேற்கொள்ளவுள்ள மத்திய குழுவினர், வரும் 27ஆம் தேதி சென்னை வந்து, மீண்டும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post