தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: சந்திர சேகர ராவ்

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உறுதியளித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை தெலங்கானா முதலமைச்சரிடம், தமிழக அமைச்சர்கள் வழங்கினர். கடிதத்தை பெற்றுக் கொண்ட தெலங்கானா முதலமைச்சர், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.

இந்த திட்டம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் கலந்தோசிக்குமாறு கேட்டுக் கொண்ட தெலங்கானா முதலமைச்சர், 3 மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி, திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற முழு  ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அண்டை மாநிலங்களிடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழகமும் தெலங்கானாவும் முன்னுதாரணமாகத் திகழும் எனவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

இதையடுத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். மரியாதை நிமிர்த்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

Exit mobile version