சந்திரசேகர ராவுடன் சந்திப்பு: ஸ்டாலின் விளக்கத்தால் பலரும் அதிர்ச்சி

மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சந்திரசேகர ராவுடன் நடைபெற்ற பேச்சு மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைக்கு 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து பல்வேறு நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என தலைவர்கள் சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து மாநில தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சென்னை வந்த சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள ஸ்டாலின், சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என கூறியுள்ளார். திமுக ,காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ராகுலை ஸ்டாலின் முன் மொழிந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை. இதனால் அதிர்ந்து போன ஸ்டாலின் பின்னர் மாற்றி பேசினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே மூன்றாவது அணிக்கும் ஸ்டாலின் தளம் போடுவது அரசியல் நிபுணர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சந்திர சேகர ராவுடன் நடைபெற்ற சந்திப்பானது, மூன்றாவது அணி பற்றியதுதான் என்பது பாமரனுக்கும் தெரியும் போது மரியாதை நிமித்தமானது என கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு ? பதவி வெறிப்பிடித்து திரியும் திமுக , வாய்ப்பு கிடைத்தால் காங்கிரசை கைகழுவி விட்டு சந்திரசேகர ராவுடன் கூட்டணி அமைக்க தயாராகிவிட்டதையே காட்டுகிறது. திமுகவின் நிறம் மாறும் குணத்தை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

Exit mobile version