சென்னையில் போலி தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் பல லட்சம் மோசடி செய்ததாக, 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய தொலைத் தொடர்புத்துறை தமிழக சி.பி.சி.ஐ.டி யிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்தது. அதில் சென்னையில் சிம் பாக்ஸ் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, உள்ளூர் அழைப்புக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஆயிரத்து 500 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.