உயர் நீதிமன்ற நீதிபதி பெயரை சொல்லி சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் மோசடி செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் நகை கடையில், உயர் நீதிமன்ற குமாஸ்தாவாக பணியாற்றுவதாகக் கூறி கண்ணன் என்பவர் 38 சவரன் நகையை அடகு வைக்க முயன்றார். இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி எனக்கூறிக்கொண்டு லதாவும் அடகு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால், கடையில் அடகு வைக்கப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நீதிபதி கிருபாகரனின் பெயரைச் சொல்லி, வெங்கடேஷ் என்பவர் நகைக் கடை ஊழியரை மிரட்டியுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த நகைக் கடை பாதுகாப்பு அதிகாரி போலீசில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நீதிபதி கிருபாகரனிடம் கேட்டதில், வழக்கறிஞர் வெங்கடேஷ் மற்றும் கண்ணன் என்னும் நபர்களைத் தமக்குத் தெரியாது என தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கண்ணன் மற்றும் வெங்கடேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை மட்டும் கைது செய்தனர். இதில் தலைமறைவான வெங்கடேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.