தியாகி கக்கன் அவர்களின் பிறந்த தினமான இன்று, கக்கன் அவர்களின் இறுதிக் காலத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கக்கன் அவர்களை சந்தித்து உதவிய நெகிழ்ச்சிப் பதிவுகளைக் காண்போம்…
காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தியாகி கக்கன் அவர்களின் தூய்மையை தமிழகம் நன்றாக அறியும். மாசில்லாத கரத்துக்கும், கலங்காத மனதிற்கும் உரியவரான கக்கன் அவர்கள் பதவியில் இருந்த காலத்திலேயே அதைப் பயன்படுத்தாதவர், பதவி போன பின்னர் அவர் இன்னும் எளிமையாக வாழ்ந்தார்.
1978 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வராக உள்ள போது, அவரது இல்லமான ராமாவரம் தோட்டத்தில் மக்கள் தங்கள் மனுக்களை அளித்துவிட்டுச் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தனர். ஒரு நாள் ஒரு பெண்மணி அங்கு வந்து உதவி கேட்கத் தயங்கி நின்றதைப் பார்த்த முதல்வரின் உதவியாளர்கள் அவரிடம் அவரைப்பற்றி விசாரிக்கிறார்கள். அவர் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் மனைவி என்பதையும், அப்போது கக்கன் குடும்பத்தினர் வாடகை கொடுக்கக் கூட முடியாமல் உள்ளனர் என்பதையும் அவர்கள் அறிந்து அதிர்கிறார்கள். இத்தனைக்கு அவர்கள் இருந்தது வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புதான். அதன் வாடகைக்குக் கூட அவர்களிடம் பணமில்லை. இதனால் அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சீல் வைக்க வர, அவர்களிடம் ஒருநாள் அவகாசம் கேட்ட கக்கன் அவர்களின் மனைவி உதவி என்றால் தமிழகம் அன்று அறிந்த ஒரே மனிதரான எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்க வந்திருந்தார்.
இந்தத் தகவலை உதவியாளர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தெரிவிக்க, உடனே திருமதி கக்கன் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவிட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், அவரை இன்னொரு காரில் அவரை மிக்க மரியாதையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் கக்கன் அவர்கள் குடும்பத்தினர் அதுவரை கட்டாமல் இருந்த 170 ரூபாய் வாடகை பாக்கியை எம்.ஜி.ஆர். அவர்கள் தனது சொந்தப் பணத்தில் அடைத்தார்.
பின்னர், கக்கன் குடும்பத்தினருக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்டு அதை 1979ல் திருவள்ளுவர் தின விழாவின் போது கக்கன் அவர்களின் கைகளிலேயே கொடுத்தார்.
இதன் பின்னர் 1980 ஆம் ஆண்டில் தனக்கு உடல்நலம் சரி இல்லாததால் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கக்கன் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுக்கவைக்கப்பட்டார். அவரது உழைப்பால் பலன் பெற்ற காங்கிரஸ் கட்சி அவரை முற்றிலுமாகக் கைவிட்டது.
இந்நிலையில் அப்போது மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், அதே மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்த எம்.ஜி.ஆர். அவர்கள், காரில் ஏறும்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து தயங்கித் தயங்கி, ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் இங்கேதான் ஒரு மாதமா சிகிச்சையில் இருக்கார்’ என்று சொல்ல, கட்சிபேதம் அறியாத எம்.ஜி.ஆர். அவர்கள் ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? கக்கன் அய்யா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்கிறார். ஆனால் மருத்துவமனையில் பொறுப்பில் இருந்தவர்களுக்கு கக்கன் அங்குதான் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் அந்த மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர் ஒருவர்தான், ‘கக்கன் அய்யா 24 ஆம் வார்டுல இருக்காங்க’ என்று சொல்லி உதவினார்.
ஒரு முன்னாள் அமைச்சர் அங்கு சிகிச்சைப் பெறுவதே பலருக்கும் தெரியாமல் உள்ள சூழல் எம்.ஜி.ஆர். அவர்களை மனக்கஷ்டத்திற்கு உள்ளாக்கியது. உடனடியாக கார் கதவை மூடிவிட்டு 24 ஆம் வார்டைத் தேடிச் சென்றார் எம்.ஜி.ஆர். அங்கே கட்டாந்தரையில் இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு படுத்திருந்தார் கக்கன். எம்.ஜி.ஆர். அவர்கள் வார்டுக்குள் நுழைவதைப் பார்த்து ஒரு துண்டைத் தேடித் தோளில் போட்டபடி கக்கன் அவர்கள் தடுமாறி எழுந்து கைகூப்ப முயற்சிக்க, அவரை ஓடிச் சென்று தடுத்து ஒரு நாற்காலியில் அமரவைத்தார் எம்.ஜி.ஆர்.
கக்கனின் உடல்நிலையும், வறுமையும், மருத்துவமனையில் கண்ட காட்சியும் எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். அவர்களையே கண்கலங்க வைத்தன. எம்.ஜி.ஆர். அவர்கள் கண் கலங்குவதைக் கண்டு கக்கன் அவர்களும் கண்கலங்க சூழ்ந்திருந்த மக்களும் மனம் கலங்கி அழுதனர்.
அந்நிலையில் கக்கன் அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்ட பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் ‘சொல்லுங்க…. உங்களுக்கு நான் என்ன செய்யணும்?’ என்று கேட்க,
‘ஒண்ணும் வேணாம்… நீங்க என்னைத் தேடிவந்து பார்த்ததே போதும்!’ என்று சொன்னார் எளிமையின் இலக்கனமான கக்கன். நெகிழ்ந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிவிட்டுக் கிளம்பும் போது,
‘எது வேண்டுமென்றாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்… அவசியம் செய்துதருகிறேன்’ என்று மீண்டும் சொல்லிவிட்டு வணங்கி விடைபெற்றுச் சென்றார்.
கக்கன் அவர்கள் ஒன்றும் கேட்காத நிலையிலும், சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். அவர்கள் ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார்.
கக்கன் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், சென்னைக்கு அவரை அழைத்துவந்து, மதராஸ் அரசு பொது மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். இத்தனைக்கும் பின்னர் டிசம்பர் 23, 1981-இல் நினைவு திரும்பாமலேயே கக்கன் அவர்கள் காலமானது எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மனவேதனையைத் தந்தது.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்னவர் அண்ணா என்றால், மாற்றானின் மனதின் வலிக்கும் தன்னிடம் மருந்து உண்டு என்று வாழ்ந்து காட்டியவர் பொன்மனச் செம்மல், அண்ணாவின் இதயக் கனி எம்.ஜி.ஆர். அவர்கள்.
பெரிய மனிதர்களைப் பெரிய மனிதர்கள் எப்படிப் பெரிய மனதுடன் நடத்துவார்கள் என்பதற்கு கக்கன் அவர்களிடம் எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படி நடந்து கொண்டது ஒரு மாபெரும் உதாரணமாக இன்றும் திகழ்கின்றது.