இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அரசியல் அழுத்தம் காரணமாக முன்னரே விடுவிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் நாள் அன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர் ஓட்டல்களில் அடுத்தடுத்து தொடர் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 40 வெளிநாட்டவர் உள்பட 300 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகை அதிரவைத்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு அரசு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஏற்கனவே அரசால் கைது செய்யப்பட்டவர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு அமைச்சர் ஹபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனத்தை அடுத்து ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இன்று தேசிய அளவில் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இலங்கை நாடாளுமன்றம் கூட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.