தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாவட்டங்கள் என்று ஒரு சில் மாவட்டங்களை குறிப்பிடலாம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் நீலகிரி ஆகும். இந்த நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊட்டி போட் ஹவுஸ் என்கிற ஊட்டி படகு இல்ல ஏரி ஒன்று திறம்பட விளங்கி வருகிறது. படகு சவாரியில் ஈடுபட்டு மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு வருவதுண்டு. இது ஒரு செயற்கை ஏரியாகும். இது பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1824 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி நீர்வாழ்ப்பறவைகள் அதிகளவு இந்த ஏரியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சாகச சுற்றுலா எனும் பெயரில் படகு இல்ல ஏரிக்கரையில் சில வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தனியார் முதலீட்டில் தமிழகத்தின் சுற்றுலாத்துறை இணைந்து மேற்கொண்டுவரும் இந்த வளர்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த அவர், கரைகளில் உள்ள புற்கள் மற்றும் புதர்களை அழிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை களைக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வளர்ச்சிப் பணியானது ஊட்டி ஏரியின் இயற்கை எழிலை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், ஏற்கனவே மலை காய்கறிகள் விவசாயத்தில் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் சில தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. மேலும் அரிய வகை பூச்சியினங்களும் அழியும் தருவாயில் உள்ளன. அமைச்சர் சொன்னது போல 3 மாதங்களுக்கு ஒருமுறை களைக்கொல்லி ரசாயனத்தைப் பயன்படுத்தினால் நீர்ப்பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் முக்கியமாக மண் வளம் அதிகம் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post