கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால், தனியார் டிக்கெட் முன்பதிவு மையங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. உலகம் முழுவதும் தற்போது `கொரோனா’  வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு துறைகளும் பெரும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்,  விமானச் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டு, பல விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸின் அச்சம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், அத்தியாவசிய பணிக்காக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் மட்டுமே விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலாத் துறை சார்ந்துள்ள விமானத் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 300 பேர் பயணிக்கும் ஒரு விமானத்தில், தற்போது 75 பேர் தான் பயணிப்பதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் தனியார் முன்பதிவு மையங்கள் சங்கத்தினர்.
 

பொதுவாக தங்களிடம் 20 முதல் 50 பேர் குழுவாக இணைந்து சுற்றுலா  முன்பதிவு செய்வது வழக்கம் என்றும், அந்த வகையில் ஜூன் இறுதி வரை இதுபோன்ற முன்பதிவுகள்
முடிந்துள்ளதாக கூறுகிறார் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் பாலன்.  ஆனால் தற்போதைய சூழலில் வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதால் தாங்களுக்கு பெறும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரிசெய்ய அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறார் பாலன்.  கொரோனா வைரஸ்  காரணமாக தங்களின் துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும் என தெரியவில்லை என்றும், ஆனால் இதனை சரிசெய்ய அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக சுற்றுலா துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version