இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவித்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பை கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லை. மேலும் திடீரென நாட்டை விட்டு நிரவ் மோடி தப்பிச்சென்று விட்டார். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கடந்த பல மாதங்களாக அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் லண்டனில் அவர் சொகுசாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவரை கைது செய்ய இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து போலீசார் நிரவ் மோடியை அதிரடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிரவ் மோடியை 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நிரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதேபோல் நிரவ் மோடியின் 11 சொகுசு கார்கள், 173 ஓவியங்களையும் விற்க மும்பை தனி நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.