திண்டுக்கல்லில், கனகாம்பரப்பூ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், போதுமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், நிலக்கோட்டை தாலுக்காக்களில், அதிகளவில் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள வெள்ளோடு, முருகம்பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கனகாம்பரம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பூ விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விலை வெகுவாகக் குறைந்துள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விழா காலங்களில் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான கனகாம்பரப் பூ, தற்போது 100 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் சார்பில் நறுமண பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ அரசு ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.