பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

ஆந்திரம், ஒடிசா, உத்தரக்கண்ட் மாநிலங்களில் ஆறுகளில் கரைமீறி வெள்ளம் பாய்வதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழையால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள பிரகாசம் அணையில் இருந்து நொடிக்கு மூன்று லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எழுபது மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

கிருஷ்ணா ஆற்றில் திடீரென நீரின் அளவு உயர்ந்ததால் ஆற்றின் நடுவே உள்ள முனுகோடு என்னும் தீவை வெள்ளம் சூழ்ந்தது. இந்தத் தீவில் ஆடு மேய்ப்பவர்கள் 4பேரும் அவர்களின் நானூறு ஆடுகளும் வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கவும், அவர்களை மீட்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் ஒடிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்வதால் மகாநதி, ராகுல் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆற்றுப் பாலத்தைத் தொட்டபடி வெள்ளம் பாய்வதால் சம்பல்பூர் – பொலாங்கிர் இடையே இருவழிகளிலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலியில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 கடைகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டன. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

Exit mobile version