சென்னையில் உள்ள பெண்கள் சிட்கோ தொழிற்பேட்டை அருகில், தண்ணீர் லோடு வாகனத்தில் சென்று இரவு நேரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயல் அருகேயுள்ள பெண்கள் சிட்கோ தொழிற்பேட்டையின் அருகே, இரவில் தண்ணீர் லோடு வாகனத்தில் கடந்த 3ம் தேதி ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். அப்போது, சிட்கோ நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பெங்களூரை சேர்ந்த 3 பேர் சாலையில் நடந்து சென்றுள்ளனர். இந்நிலையில், லோடு வாகனத்தில் இருந்து மூவர் இறங்கி, சாலையில் சென்றவர்களிடம் முகவரி கேட்பதுபோல் நடிக்க, வாகனத்தில் இருந்த மேலும் ஒருவர் வந்து கத்தியை காண்பித்து, அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், ஆயிரத்து 500 பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இதனையடுத்து காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வழிப்பறியில் ஈடுபட்ட சுரேஷ், பழனிபாரதி, அஜித்குமார், வசந்த்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அக்கும்பலைச் சேர்ந்த சிறுவன், கூர் நோக்கு பள்ளியில் சேர்க்கப்பட்டான்.