இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக நெல்லை மாவட்ட மீனவ மக்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இலங்கையில், நேற்று முன்தினம் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம், அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக நெல்லை மாவட்டம், பெருமணல், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், கடற்கரை வெறிச்சோடிக் கிடக்கிறது.
இதேபோல், இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
அந்தோணியார் தேவாலயத்தில் தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியே சென்று குழந்தையப்பர் தேவாலயத்தில் நிறைவடைந்தது. பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் மெளன ஊர்வலத்தில் பங்கேற்றனர். அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post