விமானத்துறை, விண்வெளித்துறை என பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்து வந்த நிலையில் தற்போது “Swiggy” டெலிவரி நிறுவனத்திலும் சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் “Swiggy” டெலிவரி பெண்ணாக சென்னை செங்குன்றத்தை சேர்த்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த மூன்று வாரமாக “Swiggy” டெலிவரி நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். இதுவரை ஆண்கள் மட்டுமே சென்னை பகுதியில் “Swiggy” யில் பணிபுரிந்து வந்த நிலையில் முதன்முறையாக இந்த நிறுவனம் பெண்ணை பணி அமர்த்தியுள்ளது. பணியின் முதல்நாளிலேயே உற்சாகமாக இருந்த ஜெயலட்சுமி கடந்த 3 வாரங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை வினியோகம் செய்துள்ளார். வேலை 6 மணி நேரம் மட்டுமே என்பதால் குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடிவதாகவும் பெருமிதம் கொள்கிறார் ஜெயலட்சுமி. 40 வயதாகும் ஜெயலட்சுமி
செங்குன்றம் முதல் ஆழ்வார்பேட்டை வரை தினசரி 120 கி .மீ மேல் பயணம் சென்று குறைந்தது 10 வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை டெலிவரி செய்யும் இவர் வாரத்திற்கு 3000 ரூபாய் ஊதியமாக பெறுகிறார்.
இந்த பணியை பொறுத்தவரை சக ஆண்கள் தனக்கு மிகவும் தோழமையுடன் இருப்பதாகவும் , உணவு வினியோகிக்க செல்லும் வாடிக்கையாளர்கள் கனிவுடன் நடந்து கொள்வதாகவும் கூறுகிறார். சென்னை போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டுவது கடினமான ஒன்றாக இருக்கும் போது இதை சவாலாக எதிர்கொண்டு ஜெயலட்சுமி உணவு பொருட்களை டெலிவரி செய்துவருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு ஆண்களுக்கு இணையாக வேகமாக வாகனம் ஓட்டுவது மற்றும் “google maps”ல் குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து உரிய நேரத்தில் செல்வது கொஞ்சம் கடினமாக இருந்ததாக என கூறியுள்ளார்.
கொல்கத்தா, கொச்சி, அகமதாபாத், புனே, நாக்பூர், மும்பை உட்பட 10 நகரங்களில் 60க்கு மேற்பட்ட பெண்கள் உணவு வினியோகம் செய்யும் பணியில் உள்ள நிலையில் தமிழகத்தில் ஜெயலட்சுமி தான் முதல் “Swiggy” டெலிவரி பெண்ணாக உள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் 3 பெண்கள் இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணி புரிவதற்கு வயது என்பது எப்போதும் தடையில்லை என்று பல பெண்கள் நிரூபித்து வரும் நிலையில் ஜெயலட்சுமியும் இதற்கு உதாரணமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post