மே 8 ஆம் தேதி அன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பேச்சாக வலம் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி எனும் மாணவி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்தார். இது பன்னிரெண்டாம் வகுப்பு வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சாதாரணக் கூலித் தொழிலாளியின் மகளான இவர் மிகப்பெரிய அளவில் சாதித்துக் காட்டியிருப்பது மிகவும் வரவேற்கத் தக்க விசயம்.
இது ஒருபக்கம் இருக்க முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ/மாணவியர்களிடையே சமூகம் தரும் அழுத்தம் எத்தகையதாக இருக்கும் என்று பார்க்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனைத்திலும் முதன்மையானவர்களாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர்கள். இந்த இடத்தில்தான் இது சமூக சிக்கலாக வலம் வருகிறது. குறிப்பாக, படிப்பில் நமது பிள்ளை முதன்மையானவராக வலம் வர வேண்டும் என்று பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு கனவும் எண்ணமும் இருக்கும். இதனால் முதல் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி பிள்ளைகளை ஊக்குவிப்பர். பிள்ளைகளுக்கும் அந்த மனநிலை வந்துவிடும். வாழ்க்கையில் எப்போதும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்கிற கவன ஈர்ப்பு மனநிலை பிள்ளைகளுக்கு வந்துசேரும். அப்படிப்பட்ட மனநிலையிலே வளர்வார்கள். இந்த இடத்தில்தான் உளரீதியான ஒரு பிரச்சினை வருகிறது. சரியாக படிக்கவில்லை என்றால் பெற்றோர்கள் திட்டுவார்கள், நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்றால் உறவினர்களை எதிர்கொள்வதில் சங்கடம் ஏற்படும். இதைத் தவிர உறவினர் வீட்டுப் பிள்ளைகள் தன் பிள்ளைகளைவிட மதிப்பெண் அதிகம் பெற்றால் அது ஒரு கவுர பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இவற்றையெல்லாமே கடந்து இளம் பிராயத்தை சரியான போக்கில் கொண்டு வாழ்க்கையினை ஓட்டுவதற்கு ஆலோசகராக இருக்க வேண்டிய பெற்றோர்கள் சமூக அழுத்ததினை பிள்ளைகளுக்கு கடத்தும் கடத்தியாக உள்ளனர். இந்தப் பிள்ளைகள் முதல் மதிப்பெண் பெற்ற பிறகு தீடிரென்று இரண்டாவது மதிப்பெண் எடுக்கும் நிலை ஏற்படும்போது முற்றிலுமாக மனம் உடையும் வாய்ப்பு ஏற்படுகிறது. முதல் மதிப்பெண் எடுத்தால் தான் அறிவாளி என்று இந்த சமூக ஏற்றுக்கொள்ளும் என்கிற கூட்டுமனப்பாண்மை தன்மையை பிள்ளைகளும் வளர்த்துக் கொள்கிறார்கள். மதிப்பெண்கள் நம் வாழ்க்கையினை மாற்றும் என்று சொல்லித் தருவதைவிட, மதிப்பான எண்ணங்களும், வேறு சில எக்ஸ்டா கரிக்குலர் ஆக்டிவிட்டிசையும் பிள்ளைகள் வளர்த்துக் கொள்வதற்கு பொற்றோர்கள் பக்க பலமாக இருத்தல் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.