மத்திய அரசு கொண்டு வரும் இட ஒதுக்கீட்டுத் திட்டம், அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, உச்சநீதிமன்றத்தில் தோற்றுப்போகும் என இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை ஆவேசமாக கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தம்பிதுரை, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது ஏற்க முடியாது என்றார்.
பிரதமர் கொடுத்த வாக்குறுதியின் படி, மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தால், நலிந்த பிரிவினர் ஏது என்று தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 69 சதவிகித இடஒதுக்கீடு முறைக்கு முதலில் அரசியல் சாசன அங்கீகாரத்தை வழங்குமாறு மத்திய அரசை தம்பிதுரை வலியுறுத்தினார்.