பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு.. எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்களை துன்புறுத்தி பற்களை பிடுங்கியதாக கிரிமினல் வழக்கு பிரிவு 506/1, 326, 324 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இபிகோ பிரிவு 506 (1)

இபிகோ பிரிவு 506(1) என்பதுகுற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இபிகோ பிரிவு 326

இபிகோ 326 என்பது மரணத்தை உண்டாக்குவதற்காகத் (துப்பாக்கியால்) சுடுதல், குத்துதல், வெட்டுதல் ஆகியவற்றிற்காக பயன்படும் கருவிகளால் அல்லது மரணத்தை உண்டாகக்கூடிய விதத்தில் நெருப்பு, நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருட்கள் அல்லது மரண அபாயத்தை உண்டாகக்கூடிய விஷம், வெடி மருந்துகள், துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள் அல்லது மனிதரின் சுவாசத்தில் உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலந்து, அத்தகைய அபாயத்தை உண்டாகக்கூடிய பொருட்கள் அல்லது மிருகங்கள் ஆகியவற்றைத் தன்னிச்சையாக பயன்படுத்தி அதனால் யாருக்காவது கொடுங்காயம் ஏற்பட்டால் அந்த நபருக்கு, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இபிகோ 324

இபிகோ 324 என்பது துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவே இவற்றில் ஏதாவது ஒற்றைப்பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயம் உண்டாக்குவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ளபடி இத்தகைய செயல் புரியப்பட்டால் இந்தத் தண்டனை பொருந்தாது).

Exit mobile version