மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி வருகிற 24ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளான வருகிற 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில், கண்தானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டி நடத்துதல், இலவச திருமணங்கள், அன்னதானம், ஏழை எளிய நலத்திட்டங்களை வழங்க வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.