சென்னை அருகே இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, மதுரவாயல் அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ரவி. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்ற நிலையில், ஐஸ்வர்யா பிரியதர்ஷினி என்ற 13 வயது மகளுடனும், ஜெயகிருஷ்ண பிரபு என்ற 11 வயது மகனுடன் மதுரவாயிலில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மனைவி பிரிந்த சோகமும், கடன் பிரச்சனையும் ரவியை வாட்டி வதைத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ரவியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. அக்கம் பக்கதினர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறையினர் ரவியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் ஐஸ்வர்யாவும், மகன் பிரபுவும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, ரவியை காவல்துறையினர் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை, கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன ரவியை தீவிரமாக தேடி வந்தனர்.
”பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்” என்பதற்கேற்ப கொலை செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. சொந்த ஊரில், ரவி கொடுத்துச்சென்ற அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவர் சென்னை மண்ணடியில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
சென்னையில், ரவியை மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியதில், மகளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், மகனின் கழுத்தை துணியால் இறுக்கியும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இறந்த குழந்தைகளை சிலிண்டருடன் துணியால் கட்டி அதற்கு தீவைத்து, விபத்து போல் காட்ட முயற்சித்ததாகவும் ஆனால் துணி பாதியிலேயே அணைந்ததால் தனது திட்டம் தோல்வி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.