வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்த கௌரி என்ற விவசாயி, தனது நிலத்தில் இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளார். நிலக்கடலை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், 100 நாட்களில் நிலக்கடலை பறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு விற்கப்படும் நிலக்கடலை செலவுகள் போக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டித்தருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதாகவும் இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்வதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டு லாபமும் நன்றாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் நிலக்கடலையை வியாபாரிகள், விவசாய நிலத்திற்கே வந்து நல்ல விலை கொடுத்து பெற்று செல்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.