அதிதீவிர புயலாக உருவான ஃபானி புயலின் கோரத் தாண்டவத்தில் ஒடிசாவின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயலில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அது அதிதீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசையில் ஒடிசா நோக்கி நகர்ந்தது. இந்தப் புயலால் ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளி ஏற்பட்டது. ஸ்ரீகாகுளத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டு, அங்கிருந்து 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஃபானி என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு. இந்தப் புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. 2014ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை தாக்கிய புயல்களில் இது அதிதீவிரமானது என்று கூறப்பட்டுள்ளது.
ஃபானி புயல் ஒடிசாவை கடந்தபோது, மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் பூரி, குர்தா, புவனேஸ்வரம், ஜெகத்சிங்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின்விநியோகம் முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவையும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. லட்சக்கணக்கானோர் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்புப் படையின் 525 குழுக்கள் மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசாவில் இருந்து வங்க தேசத்தை நோக்கி ஃபானி புயல் நகர்ந்துள்ளது. இதையடுத்து அங்கு மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஃபானி புயலில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளநிலையில், அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்வகையில் முதல்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.