என்று தணியும் இந்த கள்ளச்சராய தாகம்? ஆறாய் ஓடும் சாராயம்! சுடுகாடாய் தமிழகம்!

மே மாதம் 13ஆம் தேதி சனிக்கிழமை…
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தின் குளக்கரையில் வசித்து வரும் இருளர் குடும்பத்தில் இருந்து கிளம்பியது அந்த மரண ஓலம்…

விறகு வெட்டும் கூலி வேலை செய்து வரும் வசந்தா, அவரது மகள் அஞ்சலி, மருமகன் சின்னத்தம்பி என மூவரும் அளவுக்கு அதிகமாக குடித்த கள்ளச்சாராயம், வசந்தா மற்றும் சின்னத்தம்பியின் உயிரைக் குடித்துள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களும் வயிற்றைப் பிடித்தபடி துடிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிலர் உயிரிழக்க… தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து எழுந்த மரண ஓலம்… மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியது…..

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் மரணம் என்று அச்சாகிய செய்தித்தாள்கள் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுக்க சென்றடையும்போது தமிழகத்துக்கு தெரியவில்லை… அது இன்னொரு அதிர்ச்சியையும் சந்திக்க இருக்கிறது என்று…

எப்போதுமே உப்புவாசம் படர்ந்திருக்கும் விழுப்புரம் மாவட்ட மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் கடற்கரை கிராமத்தின் காற்றில், மே மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெத்தனால் வாசமும் சேர்ந்து கொண்டிருக்கிறது… காலையிலேயே கடலில் வலை தள்ளிவிட்டு, கரைவந்த மீனவர்களான சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ், மற்றொரு மண்ணாங்கட்டி ஆகியோர் அங்கே விற்பனையான கள்ளச்சாராயத்தை வெறும் வயிற்றில் குடித்தபடி வீட்டுக்கு வந்து படுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்… அவர்களால் உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல், துடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழக்கம் போல இங்கே முடியாது… என்று மரக்காணம் மருத்துவமனையில் கைவிரிக்க புதுச்சேரி ஜிப்மருக்கும், கண்டமங்கலத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி, சங்கர் சுரேஷ், தரணிவேல் என்று அடுத்தடுத்து பலியாகிய எக்கியார்குப்பம் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் உறைந்துவிட்டது.
தொடர் உயிர்ப்பலி அரங்கேறிய தகவலைத் தொடர்ந்து அங்குவந்த போலீசார் தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் , ராஜமூர்த்தி என கள்ளச்சாராயத்தால் வதைபட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதில் ராஜமூர்த்தியும் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட மருத்துவமனை எங்கும் உறவினர்களின் அழுகுரல் எதிரொலிக்கத் தொடங்கியது.

அதே நேரம் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டது இன்னும் பரபரப்பை அதிகரித்தது.

சித்தாமூர், எக்கியார்குப்பம் என கள்ளச்சாராயம் மனித உயிர்களை ருசித்த கொடூரம், ஊடகங்கள் மூலம் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பரவியது. மகனை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி, குடும்பத்தலைவனை இழந்த உறவுகள் என்று 22 உயிர்கள் இந்த கள்ளச்சாராயத்தால் பறிபோயிருக்கிறது.

எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நிகழ்ந்ததும் பலியானவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், திமுக அரசின் இரண்டாண்டு கால சாதனை, தமிழகத்தை போதை மாநிலமாக உருவாக்கியது தான் எனவும் குற்றம் சாட்டினார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறை தான் இன்றைக்கு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உயிரிழப்பிற்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் கூறி கண்டனம் தெரிவித்தார்.

அதேபோன்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சோகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒட்டுமொத்த தமிழக மக்களின் முதல் கேள்வி இந்த படுபாதகச் செயலை,கள்ளச்சாராய விற்பனையை செய்தது யார்? இரண்டாவது கேள்வி, கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதாகச் சொல்லி டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு என்ன செய்கிறது? என்பதுதான்…

முதல் கேள்விக்கான பதில்… துள்ளத்துடிக்க 22 உயிர்களைப் பறிகொண்ட கள்ளச்சாராய விற்பனையை செய்தது, திமுகவைச் சார்ந்தவர்கள் என்பதுதான்.

சித்தாமூர் பகுதியில் நிகழ்ந்த விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் அமாவாசை, சந்துரு, வேலு, ராஜேஷ், நரேஷ், விளம்பூர் விஜயகுமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அமாவாசை சித்தாமூர் ஒன்றிய திமுக கவுன்சிலரான நாகப்பனின் சகோதரர் ஆவார். பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்று வந்த அமாவாசைக்கு, நாகப்பன் உறுதுணையாக இருந்துள்ளதோடு, சித்தாமூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கும், உளவுத்துறை அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூலும் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதே போன்று, எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டது, மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அமரன். நீண்ட நாட்களாகவே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அமரன் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், லஞ்சம் வாங்கிக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட அமரன் விற்பனை செய்த கள்ள சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர்குப்பத்தை சேர்ந்த சுப்புராயன் என்பவர் உயிரிழந்திருக்கிறார். அப்போதே போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால்தான், கள்ளச்சாராயத்துக்கு மேலும் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அமரனின் பின்னணியில் இருந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவது விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய திமுக பிரமுகர்தான் என்று அடையாளம் காட்டப்படுகிறது.

கண்டமங்கலத்தில் சிகிச்சையில் இருந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும், திமுக பிரமுகர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி திமுகவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காக திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லையா என்றால்… செய்தது… கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயையும், மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயையும் நிவாரணமாக அறிவித்தது. சித்தாமூர் பகுதியில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு உயிரிழப்புக்கு காரணமான திமுக நிர்வாகியின் சகோதரர் அமாவாசைக்கும் 50ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது இந்த விடியா திமுக…

விஷ சாராயத்தைக் கொடுத்து, உயிர் குடித்தவருக்கே அரசு நிவாரணம் வழங்குகிறது என்றால், எந்த அளவுக்கு இந்த ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றே தேவையில்லை. அதைவிடக் கொடுமை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ஆறுதல் தெரிவிக்க ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வராததுதான். சோகத்தில் பங்கேற்கக் கூட உடனடியாக வர முடியாத இப்படி ஒரு ஆட்சி தங்களுக்கு தேவையில்லை என்கிறார்கள் உறவுகளைப் பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்திருப்பவர்கள்.

உயிர்ப்பலியானவர்களுக்காக அழுவதா, சிகிச்சையில் இருப்பவர்களுக்காக வேதனைப்படுவதா என்று திக்குமுக்காடும் மனநிலையில் இருப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப்படாததும் வேதனையையே அதிகரித்துள்ளது. அரசு 10 லட்சம் ரூபாயை அறிவித்துவிட்டதாகச் சொல்கிறார்களே… இந்தப் பணம் தங்களுக்கு சுமங்கலி பட்டத்தை தந்துவிடுமா என்று எழுப்பும் கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் நிச்சயம் பதில் இருக்கப் போவதில்லை.

ஆனால், இரண்டு ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் விற்பதையும் தடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசு, இன்று உயிரிழப்புகள் நிகழ்ந்ததும், தன்மீது தவறு இல்லை என்பதைப் போல, காட்டிக்கொள்ள பகீரதப்பிரயத்தனம் செய்கிறது. தன் ஆட்சியின் தவறுகளை மறைக்க ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றுவது போல தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினரையும் இடம் மாற்றி, நான் ரொம்ப நல்லவன் என்னும் வேஷத்தை கட்டியிருக்கிறது.

முதல்வருக்கு வக்காலத்து வாங்குவது போல டிஜிபியும், கடந்த 2 ஆண்டுகளில் காவல்துறை கிட்டத்தட்ட 2லட்சம் சாராய வழக்குகளை பதிவு செய்திருப்பதாகவும், 2லட்சம் பேரை கைது செய்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அப்படி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பதே பூண்டோடு அழிக்கப்பட்டிருக்க வேண்டுமே… பின்னர் எப்படி இந்த உயிரிழப்புகள் என்றால் அதற்கும் ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

அதாவது, இது கள்ளச்சாராயம் அல்ல… தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்கிற விஷச்சாராயமாம். கள்ளச்சாராயத்தை கடத்த முடியாமல் இருப்பதால்தான் விஷச் சாராயத்தை பயன்படுத்தியதாக டிஜிபி தெரிவித்துள்ளார். மரக்காணம் அமரனிடமும், சித்தாமூர் அமாவாசையிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவில், இருவரும் பல்வேறு கரங்களைத் தாண்டி புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையிடம் இருந்து விஷச்சாராயத்தை வாங்கியதாக கூறியுள்ளார்.

தற்போது கள்ளச்சாராய சாவு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் ஏழுமலை, புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர். புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவாவின் தீவிர ஆதரவாளரான ஏழுமலைக்கு, சமீபத்தில்தான் கட்சியில் பதவிகளும் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழுமலையின் கைது மூலம், மாநிலம் தாண்டியும் திமுக, சாராய சாம்ராஜ்யம் நடத்திவருவது அம்பலமாகி உள்ளது.

 

பொதுவாக சாராயம் கள்ளச்சாராயம், விஷ சாராயம் என்று இருவடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டுக்கும் வித்தியாசமும் உள்ளது. உரிமமும், அரசு அனுமதியும் இல்லாமல் மதுவை காய்ச்சினால் அது கள்ளச்சாராயம். அதே சாராயத்தில் போதைக்காக மெத்தனாலை கலந்துவிட்டால் அது விஷ சாராயமாகி விடுகிறது. பெரும்பாலும் மதுவகைகளில் எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால்தான் இருக்கும். ஆனால், தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்களின் தயாரிப்பில் தான் மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இதில் 90 முதல் 100 சதவீதம் வரை ஆல்கஹால் இருந்தாலும், அதனை நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் அதனால் மரணமே சம்பவிக்கும். தற்போது இத்தகைய விஷச் சாராயம்தான் விற்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. அது, மரக்காணம் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் கைப்பற்றப்பட்ட பழைய சாராயத்தை, பணத்தை வாங்கிக் கொண்டு போலீசார் சாராய வியாபாரிகளிடம் கைமாற்றி விட்டதாகவும், அதனை அவர்கள் விற்பனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரம், கள்ளச்சாராய உயிரிழப்பில் திமுகவினரின் தொடர்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததால்தான், விஷச்சாராய சாவுகள் நிகழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கைகளும், நாடாளுமன்ற கேள்வி, பதில்களும் சுட்டிக் காட்டியும் இருக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளின் எண்ணிக்கை 126. அதுவே
2007ஆம் ஆண்டில்135ஆகவும், 2008ஆம் ஆண்டில் 101ஆகவும், 2009 காலகட்டத்தில் அதிகரித்து 429ஆகவும்,
2010ஆம் ஆண்டில் அதுவே185ஆகவும், திமுக ஆட்சி முடிந்த 2011ல் 481 பேரும் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில், 2020ஆம் ஆண்டு மட்டுமே 20 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது டாஸ்மாக்குகள் மூடப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அருந்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவுகளுக்கு திமுக எப்படி பொறுப்போ, அதே போன்று தான் தமிழகத்தில் மதுவிலக்கு நீர்த்துப் போனதற்கும் திமுகவே காரணமாகி உள்ளது. பேரறிஞர் அண்ணா காலத்திலும் மதுவிலக்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நிதி நிலையைக் காரணம் காட்டி, 30ஆகஸ்ட் 1971 அன்று மதுவிலக்கை தள்ளி வைத்தவர் கருணாநிதி. அதற்காக ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் எதிர்ப்புக் குரல் எழுப்பிய போதும், அண்டை மாநிலங்களில் நடைபெற்ற மதுவிற்பனையை சுட்டிக்காட்டி மதுவிலக்கை தள்ளி வைத்தார். இதனால் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும் திறக்கப்பட்டு திமுகவினரே அதிக ஆதாயம் அடைந்ததோடு, விஷச் சாராய சாவுகளும் அரங்கேறியது. தனது கட்சிக்காரர்களுக்காக மதுவிலக்கை தள்ளி வைத்தவர், அதன்பின்னர் 30 ஜூலை 1973 அன்று கள்ளுக் கடைகளும் 1 செப்டம்பர் 1974 முதல் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார். கருணாநிதிக்குப் பின்னர் ஆட்சிக்கட்டிலில் ஏறிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதனைக் கடைப்பிடித்தார். ஆனாலும், நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளின் காரணமாக, மதுவிலக்கை ரத்து செய்த எம்.ஜி.ஆர், , 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மலிவு விலை மதுவைக் கொண்டு வந்து தமிழகத்து பெண்களின் தாலிகளை எல்லாம் பறிக்கும் கொடுமையை அரங்கேற்றினார். அதனை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா ரத்து செய்தார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவும், விஷச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், குடி நோயாளிகளையும் கருத்தில் கொண்டும் அதன் பின்னர் டாஸ்மாக் மூலமாக மதுவிற்பனை நடைபெற்ற போதிலும், அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 1600க்கும் அதிகமான மதுக்கடைகளை புரட்சித்தலைவி ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமியும் மூடினர்.

ஆனால் 2016ல் மதுவிலக்கை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, 2021ல் ஆட்சியில் அமர்ந்த நிலையில் இதுவரை அதுகுறித்து எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுவதாக கருப்புக்கொடி எல்லாம் பிடித்த ஸ்டாலின், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்னர் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்கூடு. டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக சட்டப்பேரவையில் வெறுமனே அறிவித்துவிட்டு, மனமகிழ் மன்றங்கள் பெயரிலும், சர்வதேச விளையாட்டுப் போட்டுகளின் போது மதுபானம் பரிமாறலாம் என்றும், தானியங்கி மதுபான விற்பனை இயந்திரங்களை நிறுவியும் மதுபான விற்பனையை அதிகரிப்பதிலேயேதான் முன்னோக்கிச் சொல்கிறது. டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதிக அளவில் விற்பனை செய்பவர்களுக்கு பரிசுகள் அளிப்பது, குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுபானங்களை அதிக அளவில் விற்பனை செய்ய வற்புறுத்துவது என்றெல்லாம் மதுபான விற்பனையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

கூட்டணிப் போர்வையில் திமுகவுடன் பயணிக்கும் கட்சிகளும் கூட மக்களின் நலன் கருதி திமுகவின் மதுவிற்பனைக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. எங்கே தங்களின் நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணியில் ஓட்டை விழுந்துவிடுமோ… கூடுதலாக சீட்டுகிடைக்காதோ…. தேர்தல் செலவுக்கு பெட்டி கிடைக்காதோ என்று தலையாட்டி பொம்மையாய் திமுகவுக்கு ஆமாம் சாமி போட்டுத் திரிகின்றன. எதிர்ப்பு அறிக்கை கொடுக்கிறேன் பேர்வழி என்னும் பெயரிலும் அதிகாரிகளைக் கண்டிப்பதை மட்டுமே கடமையாகச் செய்கின்றனரே தவிர ஆட்சியாளர்களை நோக்கி சுட்டுவிரல் கூட நீட்டுவதில்லை. எல்லா விவகாரங்களிலும், தன்னிடம் அடிமை ஒப்பந்தம் போட்டிருப்பவர்களாகவே கூட்டணிக் கட்சியினரையும் நடத்தி வருகிறது திமுக…

டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் அதே நேரம், திமுகவினர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது திமுக. கல்வராயன் மலைப்பகுதிகளில் கண்டறியப்படும் கள்ளச்சாராய ஊறல்களின் பின்னணியில் திமுகவினர் இருப்பதால்தான், மதுவிலக்கு போலீசார் கணக்கு காட்டுவதற்காக ஊறல்களை மட்டுமே அழிப்பதாகவும் கைதுகள் காட்டப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒப்புக்குச் சப்பாணியாக மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால்தான் மரக்காணம், சித்தாமூர் பகுதிகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறை, ஆளும்கட்சியினர், கள்ளச்சாராய வியாபாரிகள் கூட்டணி போட்டு நடத்திய நாடகத்தின் விலைதான் இன்று பறிபோன உயிர்கள். உயிரிழப்புகளுக்குப் பின்னால், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிரடியாக நூற்றுக்கணக்கானோரை கைது செய்வதாக கம்புசுற்றும் காவல்துறை, இத்தனை நாட்களாக என்ன செய்தது? ஏதாவது குற்றங்களோ, விபரீதங்களோ நிகழ்ந்தபின்னர்தான் காவல்துறை விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா? அதுவரை கும்பகர்ண தூக்கத்தில்தான் இருந்ததா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில், டாஸ்மாக்கிலும் கோல்மால்கள் அரங்கேறுவதாகவும், அதனால் இதே போன்று உயிரிழப்புகள் நிகழக்கூடுமென்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஏற்கனவே டாஸ்மாக் பார்களில் கரூர் கம்பெனியின் அழுத்தத்தால் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், அதனால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கள்ளச்சாராய சாவு போல, டாஸ்மாக்காலும் தொடர் மரணங்கள் நிகழக்கூடும் என்னும் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
மீண்டும் உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் விடியா திமுக விழித்தெழுமா? அல்லது எவன் செத்தால் எனக்கென்ன என்று தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் காட்டுமா? இது மக்களைக் காப்பதற்கான ஆட்சியா? அல்லது மக்களைக் கொலை செய்யும் ஆட்சியா? விடியா ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளில் இந்த உயிர்கொலைகளும் அடங்குமா? தற்போது நடப்பவற்றை எல்லாம் பாத்துக் கொண்டிருக்கும் மக்களின் மனங்களில் எழுந்துள்ள கேள்விகள் தான் இவை. இவற்றுக்கான பதிலையும் காலம் பார்த்துச் சொல்லக் காத்துக் கொண்டிருப்பவர்களும் அவர்களே!

 

 

 

 

Exit mobile version