சாராய சாவுகள்; திமுக மீது அதிருப்தி அதிமுகவுடன் கைகோர்க்க விசிக விருப்பம்! திசைமாறும் திமுக கூட்டணி கட்சிகள்!

விடியா ஆட்சியில் டாஸ்மாக்குக்கு எதிராகவும், கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்க்க திமுக கூட்டணிக் கட்சியினரே ஆர்வம் காட்டி வருவது குறித்துப் பார்ப்போம்…

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்த அதிமுகவின் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது ஒரே கையெழுத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். புரட்சித் தலைவியின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதாவிப் பின்பற்றி 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். இப்படி அதிமுகவின் கடந்த கால ஆட்சியில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனாலும் எதிர்க்கட்சியான திமுக, விளம்பரம் பெறும் நோக்கில் கருப்புக் கொடி ஏந்தி டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராட்டம் நடத்துவது போல பாசாங்கு செய்தது.

2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜிகினா வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போது மதுவிலக்கை அமல்படுத்துவதாகவும், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியதையும் தூக்கி ஓரம் கட்டிவைத்தது. தொடர்ந்து டாஸ்மாக் மூலமாக திமுகவின் அதிகார மையங்களின் கஜானாவை நிறைத்துக் கொண்டது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளையும் தாண்டி மதுவிற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில், மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது; அதே போல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளிலும் மதுபானம் பரிமாறும் வகையில் அரசாணையும் வெளியிட்டது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, திருமண நிகழ்வுகளிலும் மதுபானம் பரிமாற அனுமதி அளித்தது. அதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவசர அவசரமாக திமுக அதனை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் தானியங்கி மதுபான விற்பனையையும் திமுக அறிமுகம் செய்ததையும் சுட்டிக்காட்டி அதிமுக கண்டனத்தை தெரிவித்தது. இப்படி திமுகவின் மதுபான விற்பனைக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில்தான், திமுக கூட்டணி கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளருடன் கைகோர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக விடியா அரசு மீது கடும் எதிர்ப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் விழுப்புரம் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும், திமுக ஆட்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கள்ளசாராயத்தை காரணம் காட்டி, அரசே மதுவணிக்கத்தை அனுமதிப்பது அல்லது நடத்துவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ள அவர் மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மதுவிலக்கு தொடர்பாக திமுக ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாக, அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கட்சியுடன் இணைந்து போராடுவதாக அறிவித்துள்ளது, மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுவது அதிமுக மட்டுமே என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக்கியது.

Exit mobile version